முதல்கட்ட விவாதத்திற்கு பிறகு ரோம்னிக்கு மக்கள் மத்தியில் அதிக ஆதரவு இருப்பதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. இதில் தற்போதைய அதிபரான பராக் ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் ரோம்னி போட்டியிடுகிறார்.
தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது. அமெரிக்க வழக்கப்படி தேர்தலுக்கு முன்னதாக அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் தொலைக்காட்சியில் நேரடி விவாதத்தில் ஈடுபடுவது வழக்கம். இந்த விவாதத்தின் போது வேட்பாளர்கள் தங்களது நிலைப்பாடு மற்றும் கொள்கை முடிவுகளை எடுத்துரைத்து மக்கள் மனதை வெல்ல முயல்வார்கள்.
டென்வரில் இந்த தொலைக்காட்சி விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் ஒபாமா மற்றும் ரோம்னி ஆகியோர் தங்களது பிரச்சாரத்தின் மையக் கருத்தை எடுத்துரைத்தனர். அப்போது பேசிய ஒபாமா தமது அரசு கடந்த 4 ஆண்டுகளில் 23 மில்லியன் வேலைவாய்ப்பை உருவாக்கியிருப்பதாக தெரிவித்தார். பொருளாதார கொள்கை குறித்து ரோம்னி இரட்டை நிலையை கடைபிடிப்பதாகவும் அவர் குற்றஞ் சாட்டினார்.
எனினும் ரோம்னி பேசும் போது, ஒபாமாவின் கொள்கை முடிவுகளை கடுமையாக விமர்சித்தார். அமெரிக்கா எதிர்காலம் பற்றி தாம் கவலைப்படுவதாகவும் கடந்த 4 ஆண்டுகளில் அமெரிக்கா சென்ற பாதை கவலை அளிப்பதாகவும் கூறிய அவர், இனி எந்த திசையில் அமெரிக்கா செல்ல வேண்டும் என்பதை வாக்காளர்கள் தீர்மானிக்க வேண்டுமென்றும் அவர் கூறினார்.
இந்த விவாதத்திற்கு பிறகு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் ரோம்னிக்கு அதிக வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்தனர். ஒபாமாவுக்கு குறைந்த சதவீத ஆதரவே கிடைத்தது. இந்த விவாதத்திற்கு முன்னதாக இரு தலைவர்களும் புன்னகையோடு கைகுலுக்கி கொண்டு பின்னர் விவாத மேடைக்கு சென்றனர். டென்வர் பல்கலை அரங்கில் இந்த விவாதம் நடைபெற்றது.
அப்போது அதிபர் ஒபாமா பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த தமது மனைவி மிச்சிலியை குறிப்பிட்டு தங்களது 20வது திருமண ஆண்டு என்றும் கூறினார். உடனே பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பலை உண்டானது. அப்போது எதிர்க்கட்சி வேட்பாளரான ரோம்னி, ஒபாமா தம்பதிக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். ரோம்னியின் மனைவியும் பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்தார்.
|