நூற்றுக்கணக்கான பயணிகள் செல்லும் விமானங்களை இயக்கும் விமானிகளில் மூன்றில் ஒருவர் பணியின்போது தூங்கிவிடுவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஐரோப்பிய காக்பிட் அசோசியேஷன் விமானிகள் குறித்து தேசிய யூனியன்கள் நடத்திய கணக்கெடுப்பின் முடிவை வெளியிட்டுள்ளது. அதில், விமானத்தை இயக்கிக் கொண்டிருக்கையில் ஏராளமான விமானிகள் அரை தூக்கத்திலோ அல்லது முழுதாகவே தூங்கிவிடுகின்றனர் என்ற அதிர்ச்சிகரமாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து, நார்வே மற்றும் ஸ்வீடனில் இந்த கணக்கெடுப்பில் கலந்து கொண்ட விமானிகளில் 43 சதவீதம் முதல் 54 சதவீதம் பேர் வரை கூறுகையில், விமானத்தை இயக்கும்போது தானாக தூக்கம் வந்து தூங்கிவிடுவதாகவும், அவர்கள் விழித்துப் பார்க்கையில் உடன் இருக்கும் விமானியும் தூங்கிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த செய்தியை டெய்லி மெயில் வெளியிட்டுள்ளது.
சோர்வால் தவறு செய்துவிடுவதாக ஸ்வீடன், நார்வே மற்றும் டென்மார்க்கில் உள்ள விமானிகளில் 5ல் மூன்றுக்கும் மேற்பட்டோர் தெரிவித்துள்ளனர். 70 சதவீதம் முதல் 80 சதவீதம் வரையான விமானிகள் தாங்கள் சோர்வாக இருப்பதால் விமானத்தை இயக்க முடியாது என்று தெரிவிப்பதில்லையாம். அவ்வாறு கூறினால் எங்கே தங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துவிடுவார்களோ என்று அஞ்சியே உண்மையை மறைத்து விமானத்தை இயக்குகிறார்களாம்.
2010ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பில் 6,000க்கும் மேற்பட்ட ஐரோப்பிய விமானிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.