டெல்லியில் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பலத்த காயமுற்று இருந்த மாணவி 13நாள் உயிருக்கு போராடி வந்தார், தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த நிலையில் உடலில் முக்கிய உறுப்புகள், மூளை செயல் இழந்ததை அடுத்து மாணவி உயிரிழந்தார். இந்திய நேரப்படி அதிகாலை 2.15 மணிக்கு 23வயது மாணவியின் உயிர் பிரிந்தது.

மாணவியை தாக்கிய கும்பல்

டெல்லியில் கடந்த 16ம் தேதி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டார். மாணவியை தாக்கிய அந்த கொடூர கும்பல் பலாத்காரம் செய்த பிறகு பேருந்தில் இருந்து தூக்கி வீசியது. மருத்துவ மாணவியுடன் வந்த ஆண் நண்பரையும் அந்த கும்பல் தாக்கியது. கடுமையாக தாக்கப்பட்ட அம்மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் சிகிச்சையால் அம்மாணவியின் உடலில் எந்தவித முன்னேற்றமுமு இல்லாமல் மேலும் மோசமடைந்தது. இதனையடுத்து கடந்த 26ம் தேதி சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மாணவி உயிரிழந்துள்ளார்.

இந்திய தூதரகம் தகவல்

உயிரிழந்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின் இந்தியா எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. மாணவி உடலை காலம் தாழ்த்தாமல் இந்தியா எடுத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

டெல்லியில் பலத்த பாதுகாப்பு

மாணவி உயிரி-ழந்ததை தொடர்ந்து டெல்லி நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லி நகரின் முக்கிய சாலைகளில் அதிரடிப் படை போலீஸ் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா கேட் பகுதியில் அனைத்து நுழைவு வாயில்களிலும் தடுப்பு வேலி போடப்பட்டுள்ளது. மக்கள் அமைதி காக்குமாறு போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.