வாடிகன் புனித பீட்டர் தேவாலயத்தில் இன்று காலை 9.30 மணிக்கு (இந்தியாவில் மதியம் 2 மணி) தொடங்கிய திருப்பலி வழிபாட்டில் போப் ஆண்டவராக பிரான்சிஸ் பதவியேற்றுக் கொண்டார். இதையொட்டி 115 கார்டினால்களும் பங்கேற்ற சிறப்பு வழிபாட்டில் பாரம்பரிய முறைப்படி, போப் பதவிக்கு உரிய மீனவரின் மோதிரமும், `பாலியம்' எனப்படும் கம்பளி கழுத்துப்பட்டையும் போப் பிரான்சிசுக்கு அணிவிக்கப்பட்டது. அதை 2 கார்டினல்கள் அணிவித்தனர். 

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் என்பதை உணர்த்தும் வகையில் 6 கார்டினல்கள் அவருக்கு மரியாதை அளித்தனர். இந்த வழிபாட்டில் 130 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும், உலகம் முழுவதிலும் இருந்து வந்த லட்சக்கணக்கான மக்களும் கலந்துகொண்டனர். அனைவருக்கும் போப் பிரான்சிஸ் ஆசி வழங்கினார்.