உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவராக கருதப்படுபவர், மைக்ரோ சாப்ட் துணை நிறுவனரான பில்கேட்ஸ் (57). சுமார் 65 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு சொத்து குவித்துள்ள இவர், பணத்தால் எனக்கு பயன் இல்லை என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.


லண்டனில் இருந்து வெளியாகும் டெலிகிராப் நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

உணவு, உடை போன்ற அடிப்படை தேவைகளை பொருத்த வரையில் நான் தன்னிறைவுடன் வாழ்கிறேன். இந்த அளவுகோலுக்கு மேல் என்னிடம் பணம் இருந்து பயன் ஏதுமில்லை. ஒரு அமைப்பை ஏற்படுத்தி இந்த பணத்தை எல்லாம் உலகில் உள்ள ஏழைகளுக்காக செலவிட விரும்புகின்றேன்.

போலியோவை ஒழித்தது போல், பல்வேறு நோய்களால் வாடும் ஏழை குழந்தைகளுக்கு நோய் தடுப்பூசி மற்றும் சுகாதார பணிகளில் சேவை செய்யும் பெண்களுக்காக என் செல்வத்தை செலவழிக்க முடிவு செய்துள்ளேன்.

1990-ம் ஆண்டில் உலகமெங்கும் 5 வயதை தாண்டாத 1 கோடியே 20 லட்சம் குழந்தைகள் நோயால் பலியாகினர். அந்த எண்ணிக்கை தற்போது 70 லட்சமாக குறைந்துள்ளது. இதேபோல் குழந்தைகளை தாக்கும் கொடிய நோய்களை ஒழிப்பதற்காக அறக்கட்டளையின் மூலம் என் பணத்தை நல்ல முறையில் செலவு செய்ய விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பில் (மற்றும்) மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில், உலக நாடுகளில் போலியோவை ஒழிக்க கடந்த 6 ஆண்டுகளில் 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது. அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக 28 பில்லியன் அமெரிக்க டாலர்களும், உலக சுகாதார மேம்பாட்டுக்காக 8 பில்லியன் அமெரிக்க டாலர்களும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.