நைஜீரியாவில் 15 கிறிஸ்தவர்களின் கழுத்தை அறுத்து தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நைஜீரியாவில் மதச்சார்பற்ற அரசு பொறுப்பில் உள்ளது. இங்கு முஸ்லிம்கள் வடக்கு பகுதியில் அதிகமாகவும்  வடகிழக்கு பகுதியில் கிறிஸ்தவர்கள் அதிக எண்ணிக்கையிலும் வசிக்கின்றனர். இந்நிலையில், நைஜீரியாவை முஸ்லிம் நாடாக அறிவிக்க கோரி தீவிரவாதிகள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், கிறிஸ்தவர்கள் மீது அவ்வப்போது தாக்குதல்களும் நடந்து வருகின்றன. இந்நிலையில் மைடுகுரி நகர் அருகில் உள்ள கிராமத்துக்குள் நேற்று புகுந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.


வீடுகளுக்குள் புகுந்து 15 கிறிஸ்தவர்களை இழுத்து சென்று அவர்களுடைய கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பினர். தகவல் அறிந்து ராணுவத்தினர் அங்கு விரைந்தனர். நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுகுறித்து லெப்டினன்ட் சாகிர் முசா கூறுகையில், இந்த படுகொலைக்கு பின்னணியில் போகோ ஹரம் என்ற தீவிரவாத அமைப்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தாக்குதல் நடந்த கிராமம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றார்.