கம்ப்யூட்டர் என்பது இன்று அனேகம் பேருக்கு மூன்றாவது கை மாதிரி. அது இன்றி ஒரு நிமிடம் கூட நகராது. உணவு, உறக்கமெல்லாம் கூட இரண்டாம் பட்சம்தான். கம்ப்யூட்டர்தான் வாழ்க்கை பலருக்கும். அந்தளவுக்கு கம்ப்யூட்டர் பயன்பாடு தவிர்க்க முடியாததாகி வருகிற நிலையில், இடைவெளியே இல்லாமல் 24 மணி நேரம் கம்ப்யூட்டரே கதி என இருப்பவர்களுக்கு ‘கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்’ என்கிற பிரச்னை வரலாம் என எச்சரிக்கிறார் கண் மருத்துவ நிபுணர் பிரவீன் கிருஷ்ணா.

அதென்ன ‘கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்’? அதன் அறிகுறிகள் எப்படியிருக்கும்? தீர்வுகள் என்ன? எல்லாவற்றையும் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அவர். ‘‘அதிக நேரம் கம்ப்யூட்டர் உபயோகிக்கிறவங்களுக்கு கண்கள் வறண்டு, கண்ணீரே இல்லாமப் போகலாம். அடிக்கடி தலைவலி, கண்கள் இழுக்கிற மாதிரி உணர்வு, கண்கள் துடிக்கிறது, எரிச்சல், பார்வை மங்கின மாதிரி உணர்வு... இதெல்லாம் கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோமோட அறிகுறிகளா இருக்கலாம்.

சதா சர்வ காலமும் கம்ப்யூட்டரே கதியா இருக்கிறவங்க, ‘20 - 20 - 20’ விதியைப் பின்பற்றியே ஆகணும். அதாவது 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, 20 நொடிகளுக்கு, 20 அடி தொலைவுல உள்ள காட்சியைப் பார்க்கணும். உள்ளங்கைகளை சூடு பறக்கத் தேய்ச்சு, மூடின கண்கள் மேல வச்சு எடுக்கலாம். கண்கள் ரொம்ப வறண்டு போனா, கண் மருத்துவரைப் பார்க்கணும்.
வறட்சியோட அளவைப் பொறுத்து, தேவைப்பட்டா, கண்களுக்கான செயற்கை கண்ணீர் மருந்துகளைப் பரிந்துரைப்பாங்க’’ என்கிற டாக்டர் பிரவீன், கம்ப்யூட்டர் வேலையில் சேர்வதற்கு முன்பே, கண் பரிசோதனையை மேற்கொண்டு, ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது என்றும் அறிவுறுத்துகிறார்.

‘‘கிட்டப்பார்வையும் இல்லாம, தூரப்பார்வையும் இல்லாம கம்ப்யூட்டருக்கு நடுத்தர பார்வை தேவை. கண்ணாடி தேவைப்படும்போது, தூரப்பார்வைக்கும் கிட்டப்பார்வைக்குமான கண்ணாடி கம்ப்யூட்டருக்கு சரி வராது. கம்ப்யூட்டர் வேலைக்கான பிரத்யேக கண்ணாடிகள் இருக்கு. ஸ்பெஷல் கோட்டிங்கோட, நடுத்தரப் பார்வைக்கான அதைக் கேட்டு வாங்க வேண்டியது அவசியம். கம்ப்யூட்டருக்கும் உங்களுக்குமான இடைவெளி சரியா இருக்கணும்.

பாதங்கள் தரையைத் தொடற மாதிரி உட்காரணும். 90 டிகிரி கோணத்துல உட்கார்றது சரியா இருக்கும். கம்ப்யூட்டருக்கு ‘ஆன்ட்டி ரெஃப்ளெக்ஷன் மானிட்டர்’ போடறதும் கண்களைப் பாதுகாக்கும்.  பொதுவா 40 பிளஸ்ல இருக்கிறவங்களுக்கு, வெள்ளெழுத்தோட சேர்ந்து, இந்த கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் பிரச்னையும் வரும். அந்தவயசுல வரக்கூடிய பிரச்னையா ஒதுக்காம, கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோமுக்கும் சோதனை செய்து, தேவையான சிகிச்சைகளை எடுத்துக்கிறது அவசியம்.’’

Post Tags: