பாகிஸ்தான் ராவல்பிண்டியில் மொகரம் மாதத்தை முன்னிட்டு ஷியா பிரிவு முஸ்லிம்கள் நேற்றுமுன்தினம் இரவு ஊர்வலம் சென்றனர். அப்போது மர்ம ஆசாமி ஒருவன், ஊர்வலத்துக்குள் ஊடுருவ முயன்றான். சந்தேகப்பட்ட மக்கள், உடனடியாக ஓடி சென்று அவனை பிடிக்க முயற்சித்தனர். அதற்குள் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தான். இதில் ஊர்வலத்தில் சென்ற 23 பேர் உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர். 68 பேர் படுகாயம் அடைந்தனர். இதேபோல் கராச்சி இமாம்பர்காவுக்கு ஊர்வலமாக சென்று கொண்டிருந்த ஷியா பிரிவு முஸ்லிம்கள் மீதும் தற்கொலை படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.


பைக்கில் வந்த மர்ம ஆசாமி, அங்கிருந்த ஆட்டோ மீது மோதி வெடிகுண்டுகளை வெடிக்க செய்தான். இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். 16 பேர் காயம் அடைந்தனர். மீட்புப் படையினர் விரைந்து சென்ற போது, அந்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் பலர் படுகாயம் அடைந்தனர். பன்னு நகரில் நடந்த மற்றொரு வெடிகுண்டு தாக்குதலில் 4 போலீஸ்காரர்கள் பலியாயினர். 20 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஒரே நாளில் வெவ்வேறு தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல்களுக்கு தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர் என்றார்.