அகிம்சையை அரணாக கொண்டு ஆங்கிலேயர்களை நம்நாட்டை விட்டே வெளியேற செய்தவர் அண்ணல் மகாத்மா காந்தியடிகள். இன்று அவரின் 144-வது பிறந்த நாள் விழாவாகும். இவ்விழா கொண்டாடும் இவ்வேளையில் சுருக்கமாக அவரை பற்றியும் அவரின் கொள்கை பற்றியும் நினைவுக்கொள்வோம் .
இவர் குஜராத் மாநிலம் போர்பந்தரில் 1869 ம் ஆண்டு பிறந்தவர் இவரது முழு பெயர் மோகன்தாஸ்கரம்சந்த் காந்தி என்பதாகும் . தனது 12 வயதில் பார்த்த ‘அரிச்சந்திரா’ நாடகம், அவருக்குள் பெரும் மாற்றத்தை உருவாக்கியது. விசுவாமித்திரர் நடத்திய சோதனைகளை எல்லாம் 'மன உறுதியால் தாங்கிக் கொண்டேன்’ என நாடகத்தில் அரிச்சந்திரன் சொன்னதைக் கேட்டு, உண்மையை மட்டுமே பேசும் மனிதராக மாறினார். அவர் மன உறுதி மற்றும் நேர்மையை வெளிநாடுகளில் படிக்கச் சென்றபோதோ அல்லது கடும் நோயுடன் மரணப் போராட்டம் நடத்திய போதோ அவர் தனது உறுதியை மாற்றிக்கொண்டதே இல்லை. தென்னாப்பிரிக்காவில் நடந்து கொண்டிருந்த நிறவெறியும் அடக்குமுறையும் காந்தியை ஒரு போராட்டக்காரராக மாற்றியது. இந்த மனஉறுதி தான் நமக்கு அவர் அன்னியரிடமிருந்து பெற்று தந்த சுதந்திரம். இந்த மன உறுதிக்கு அவர் வாழ்வில் பின்பற்றிய கொள்கைகளே காரணமாகும்.
காந்தி ஜெயந்தியை பெருமையுடன் கொண்டாடும் இவ்வேளையில் அவரின் சிந்தனைகளையும் , கொள்கைகளையும் பின்பற்றும் வகையில் சிலவற்றை நினைவில் கொள்வோம்.
- அசைக்கமுடியாத மனவுறுதியே உண்மையான பலமாகும். பிறரால் எதிர்க்க முடியாத வலிமையையும், தைரியத்தையும் கடவுளை சரணாகதி அடைந்தாள் மட்டுமே பெறமுடியும்.
- தெய்வத்தின் கணக்கு புத்தகத்தில் நமது செயல்கள் மட்டுமே குறிக்கப்படுகின்றன. நாம் படித்தவையும் பேசியவையும் அல்ல.
- எத்தனை குழப்பங்கள் இருந்தாலும் உண்மையை பேசும் மன உறுதி வேண்டும். பொய் நிலைத்திருக்கமுடியாது உண்மை என்றாவது ஒருநாள் வெளிப்பட்டே தீரும்.
- உனக்கு நீயே நீதிபதியாக இருக்க கற்றுக்கொள். தனக்கு தானே நல்லவனாக வாழ்வதில் தான் உண்மையான மகிழ்ச்சி உள்ளது.
- புகழ், இகழ் இவ்விரண்டிலிருந்தும் யாராலும் தப்ப முடியாது. கடமையை மிகசசரியாக செய்பவர்கள் புகழ் வந்தாலும், இகழ் வந்தாலும் இரண்டையும் ஒன்றுபோல ஏற்றுகொள்ளும் மன பக்குவத்தை பெறுகின்றனர்.
- பிரார்த்தனை உண்மையானதாக இருக்க வேண்டுமானால் வெறும் ஜெபமாலையை உருட்டுவதாக இல்லாமல் இதயம் அலையாமல் ஊன்றி நிற்க வேண்டும். சத்தியத்தை தெய்வமாக கருதி வணங்குவதே சிறந்த மார்க்கமாகும்.
- மனிதன் வேறு அவனது செயல் வேறு . நற்செயலை புகழ்வோம், தீய செயல்களை இகழ்வோம். ஆனால் செய்தவன் நல்லவனாக இருந்தால் மதிப்பளிப்போம்.தீயவனானால் இரக்கம் காட்டுவோம்
- இதய தூய்மையுடன் இருந்தால் இறைவன் நமது பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பான். உள்ளத்தூய்மை இல்லாதவர் செய்யும் பிரார்த்தனை விழலுக்கு இறைத்த நீரை போல் பலனளிக்காமல் போகும்.
- கோயில் மட்டும் பக்திக்கும் வழிப்பாட்டிற்கும் உரியதல்ல, நாம் பணிபுரியும் இடமும் வணங்கவேண்டிய கோயிலாகும்.
- ஆண்மை என்பது மற்றவரிடம் வீரத்துடன் நடப்பது மட்டுமல்ல. சந்தர்ப்பங்களுக்கு அடிமையாகாமல் சந்தர்ப்பத்தை தனக்கு அடிமையாக்கிக் கொள்பவனே ஆண்மையுடைய வெற்றி வீரன்.
- பகைவனை மன்னிக்க தெரியாதவன் உலகில் அடையக்கூடிய உயர்ந்த இன்பத்தை இன்னும் அடையவில்லை என்று தான் சொல்லவேண்டும். எனவே எப்படிப்பட்ட பகைவனையும் மன்னிக்கும் குணத்தினை வளர்த்துக் கொள்வது அவசியம்மாகும்.
- தனது செயலின் மூலம் கெட்டவர்களைக்கூட கொடியவர்கள் என கூறமுடியாது. ஆனால் மனதால் கெட்டவர்கள் தான் மிகவும் கொடியவர்கள் என கூறவேண்டும்.
- கடவுளிடம் பேரம் பேசாதீர்கள். அவரை சரணாகதி அடைவதே மேன்மையான வாழ்வு தரும். கடவுளிடம் முழுமையான நம்பிக்கை வைப்பவர்கள் யாரிடமும் கோபமோ அல்லது வெறுப்போ காட்டமாட்டார்கள்.பகைமை உணர்வு அற்று போகும். அவர்கள் தீமையை மட்டும் வெறுப்பார்களே தவிர, ஒருபோதும் தீயவர்களை வெறுக்கமாட்டார்கள், அவர்களை நல்வழிக்கு மாற்றுவார்கள்.
- பொதுவாக கண் பார்வை அற்றவர்களை தான் குருடர்கள் என்று எண்ணுகிறோம், அது தவறு எவனொருவன் தான் செய்த குற்றத்தை பிறர் அறியாத படி மறைத்து இன்பம் காண்கிறானோ அவனே கண்ணிருந்தாலும் குருடனாகிறான்.
- மனிதன் தனக்கு தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு வாழப் பழகிக் கொள்ளவேண்டும். அந்த மனிதனே பூரண சுகந்திரம் பெற்றவனாக இருப்பான்.
- பெற்றவர்கள் தங்களது குழந்தைகளுக்கு சேர்த்து வைக்கவேண்டிய உண்மையான சொத்து அவர்களை நல்ல ஒழுக்கமுள்ளவர்களாக வளர்ப்பதும், அவர்களுக்கு வேண்டிய கல்வியினை தருவதும் தான். இவ்விரண்டும் இருந்தால் அவர்கள் இறுதி வரை மகிழ்ச்சியாக வாழமுடியும்.
- பிறரை இகழ்ந்து பேசுபவர்கள் உடலில் உயிரிருந்தும் இல்லாதவன் போலாகிறார்கள். ஒருவரை இகழ்தல் அல்லது அவர் சார்ந்த மதம், இனம் போன்றவற்றை இகழ்தல் அற்ப குணமே அதனை ஒருபோதும் செய்தல் கூடாது.
மேற்சொன்ன மகாத்மா காந்தியின் வழிமுறைகளை பின்பற்றி வாழ்வதே அவருக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாகும்.மனிதனாக பிறந்த நாம் மனிதனாகவே வாழ்வதில் தான் மேன்மையுள்ளது மிருகமாக வாழ்வதில் இல்லை.மகாத்மாவாக வாழவில்லை என்றாலும் மனிதனாக வாழலாமே. இனியாவது முடிந்த வரை காந்தியடிகளின் கொள்கைகளை பின்பற்றி வாழலாமே.
நன்றியுடன்
நா சுரேஸ் குமார்.