உலகம் முழுவதும் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக போப் ஆண்டவர் உள்ளார். இந்த பதவியில் இருந்த 16ம் பெனடிக் தனக்கு 85 வயதாகி விட்டதால் ஓய்வு பெறுவதாக கூறி போப் ஆண்டவர் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து புதிய போப் ஆண்டவரை ஓட்டு போட்டு தேர்ந்து எடுக்கும் நடைமுறை தொடங்கி உள்ளது.

புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான ஓட்டு போடும் உரிமை 115 கர்தினால்களுக்கு உள்ளது. 48 நாடுகளை சேர்ந்த இந்த கர்தினால்கள் போப் ஆண்டவர் வசிக்கும் வாடிகன் நகரில் கூடி உள்ளனர். நேற்று இரவு 9 மணிக்கு அவர்கள் வாடிகனில் உள்ள புனித பீட்டர் தேவாலயம் அருகில் இருக்கும் சிஸ்டைன் சிற்றாலயத்தில் அமர்ந்தனர். சிவப்பு நிற உடை அணிந்து பாரம்பரிய பிரார்த்தனைகள் செய்து முடிந்த பிறகு, புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் பணியை அவர்கள் தொடங்கினார்கள்.

ஒவ்வொரு கர்தினலாக வாக்களித்தனர். நேற்றிரவு அவர்கள் தலா ஒரு தடவை வாக்களித்தனர். புதிய போப் தேர்தலில் யார்- யார் களத்தில் உள்ளனர் என்பது உள்ளிட்ட எல்லா தகவல்களும் பாரம்பரிய வழக்கப்படி ரகசியமாக உள்ளது. ஓட்டெடுப்பு தொடங்கி விட்டதால் கர்தினால்களுக்கும், மற்றவர்களுக்கும் உள்ள தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.


115 கர்தினால்களும் வாக்களித்த முதல் சுற்று ஓட்டுக்கள் உடனடியாக எண்ணப்பட்டன. இதில் எந்த ஒரு கர்தினாலுக்கு பெரும்பான்மை ஓட்டுக்கள் கிடைக்கவில்லை. 115 கர்தினால்களில் இருந்து ஒருவர்தான் புதிய போப் ஆண்டவராக தேர்வாக முடியும். ஆனால் அவர் மொத்தம் உள்ள 115 பேரில் குறைந்தபட்சம் 77 கர்தினால்களின் ஓட்டுக்களைப் பெறவேண்டும். நேற்றிரவு நடந்த முதல் சுற்று ஓட்டெடுப்பில் எந்த கர்தினாலுக்கும் 77 ஓட்டுக்கள் கிடைக்க வில்லை. இதனால் முதல் சுற்று ஓட்டெடுப்பு தோல்வி அடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

போப் ஆண்டவர் தேர்வில் ஒருமித்த கருத்து ஏற்படாததைத் தொடர்ந்து சிஸ்டைன் சிற்றாலயத்தில் உள்ள புகைப் போக்கியில் இருந்து கரும்புகை வெளியிடப்பட்டது. இன்று (புதன்கிழமை) மீண்டும் ஓட்டெடுப்பு நடைபெற உள்ளது. இன்று முதல் காலை 2 தடவையும், மாலை 2 தடவையும் தினமும் 4 தடவை ஓட்டெடுப்பு நடத்தப்படும்.

115 கர்தினால்களிடமும் ஒருமித்த கருத்து உருவாகும் வரை தினமும் ஓட்டெடுப்பு நடத்தப்படும். இன்றும் முடிவு தெரியாவிட்டால், நாளை மற்றும் நாளைமறு நாளும் ஓட்டெடுப்பு நடக்கும். வியாழன், வெள்ளிக்கிழமைகளிலும் புதிய போப் ஆண்டவர் தேர்ந்து எடுக்கப்படாவிட்டால் சனிக்கிழமை ஓட்டெடுப்பு நடத்தப்பட மாட்டாது. அன்று கர்தினால்கள் கூடி பேசி ஆலோசனை நடத்துவார்கள். மறுநாள் ஞாயிறு அன்று ஓட்டெடுப்பு நடத்தப்படும்.

அதில் எந்த கர்தினால், போப் ஆண்டவராக மாறுவார் என்பது தெரிந்துவிடும். ஆனால் ஓட்டெடுப்பு ஓரிரு நாட்களிலேயே முடிந்து விடும் என்று வாடிகன் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று அல்லது நாளை புதிய போப் ஆண்டவர் யார் என்பது தெரிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய போப் தேர்வானதும் சிஸ்டைன் சிற்றாலய புகைப் போக்கியில் இருந்து வெள்ளைப்புகை வெளியேறும். புனித பீட்டர் தேவாலய மணிகளும் ஒலிக்கப்படும்.
இதனால் வாடிகனில் குவிந்துள்ள மக்கள் வெள்ளை புகை எப்போது வரும் என்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள். புதிய போப் ஆண்டவரை தேர்ந்து எடுக்கும் 115 கர்தினால்களில் 60 பேர் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள். எனவே ஐரோப்பியர்களில் ஒருவர்தான் புதிய போப் ஆக அதிக வாய்ப்பு உள்ளது. என்றாலும் தற்போதைய நிலவரப்படி கனடா நாட்டை சேர்ந்த மார்க் கியூலெட்டுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

இத்தாலி கர்தினால் கியான் பிரான்கோ ரவசி, அர்ஜெண்டினாவின் லியானர்டோ மற்றும் ஜார்ஜ் பிரேசிலின் ஒடிலோ பெட்ரோ, ஆஸ்திரியாவின் கிறிஸ்டோப், இத்தாலியின் ஏஞ்சலோ மற்றும் டர்சிசியோ, கயானாவின் பீட்டர், அமெரிக்காவின் திமோத்தி ஆகியோரும் புதிய போப் தேர்வில் அதிக வாய்ப்புடன் களத்தில் உள்ளனர்.

பிரெஞ்சு தலைமைப் பேராயர் ஜீன் லூயிஸ் டாரனுக்கு விரைவில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள புதிய போப்பின் பெயரை மக்கள் மத்தியில் அறிவிக்கும் பெருமை கிடைத்திருக்கிறது. டாரன் போர்டியோவின் டீக்கனார் வரிசையிலுள்ள மிகவும் மூத்த நிலை உள்ள பேராயர் இவரே ஆவார். மேலும் இவர் மறைந்த முன்னாள் போப் இரண்டாம் ஜான் பாலுக்காக உலகம் முழுவதும் சுற்றி வந்ததால் இவருக்கு அடுத்த போப்பாண்டவரின் பெயரை அறிவிக்கச் செய்யும் பெருமை கிடைத்திருக்கிறது.

ஸிஸ்டின் தேவாலயத்தில் தெரிவு செய்யப்பட்ட புதிய போப்பாண்டவரின் பெயரை, டாரன் அந்தத் தேவலாயத்தில் இருந்து வெளியே வந்து மக்களிடம் இலத்தீன் மொழியில் மகிழ்ச்சியோடு போப் ஆண்டவரின் பெயரை அறிவிப்பார்.