ஒலிம்பிக் போட்டிகளின் பிறப்பிடமாக கருதப்படும் கிரேக்க நாட்டில் உள்ள ஒலிம்பியா நகரத்தில் இன்று ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது. 2600 ஆண்டுகள் பழமையான அப்பல்லோ கடவுளின் ஆலயத்தில் நடிகர்கள் பழங்கால கிரேக்கர்களைப் போல உடையணிந்து இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.


அவர்கள் குவி லென்ஸ் கண்ணாடி மூலம் ஜோதியை ஏற்றினர். நவீன ஒலிம்பிக் போட்டி 1896-ம் ஆண்டு முதல் தொடங்கியது. இந்த ஆண்டு லண்டனில் நடைபெற இருக்கும் இந்த நவீன ஒலிம்பிக் போட்டி தொடங்குவதை உணர்த்தும் விதமாக ஒலிம்பியாவில் இந்த ஜோதி ஏற்றப்பட்டுள்ளது.

இந்த ஜோதி பல நாடுகள் வழியாக 78 நாட்களில் லண்டன் சென்றடையும். இந்த நிகழ்ச்சியில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் ஜேக்ஸ் ரோஜ், லண்டன் ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் செபாஸ்டின் கோ ஆகியோர் கலந்து கொண்டனர். ஜுலை மாதம் 27-ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 12-ந் தேதி வரை, மொத்தம் 15 நாட்கள் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் 150 நாடுகள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.