கத்தார் அரசுக்கு சொந்தமான கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனம், கடந்த 2006-ம் ஆண்டிலிருந்து ஜாக்பாட் லாட்டரியை நடத்தி வருகின்றது. 5 ஆயிரம் பேர் லாட்டரி டிக்கெட்டை வாங்கிய பின்னர், உடனடியாக இந்த குலுக்கல் வாடிக்கையாளர்கள் எதிரில் தோகா விமான நிலையத்தில் நடத்தப்படும்.
இந்த குலுக்கலின் முதல் பரிசு பத்துலட்சம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பு ரூ. 5.5 கோடி) ஆகும். கத்தார் நாட்டு விமானப்படையில் மெக்கானிக்காக வேலை பார்த்துவரும் திருவனந்தபுரத்தை சேர்ந்த இந்தியரான சதீசாபாபு (50) என்பவர், கடந்த 4 ஆண்டுகளாக இந்தியாவுக்கு திரும்பிவர தோகா விமான நிலையத்திற்கு வரும்போதெல்லாம் இந்த ஜாக்பாட் லாட்டரி டிக்கெட் வாங்குவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.
சமீபத்தில் அவர் வாங்கிய டிக்கெட்டுக்கு முதல்பரிசு விழுந்துள்ளது. 'இந்த பணத்தைக் கொண்டு என் குடும்பத்தின் எதிர்காலத்தை வளமாக்கி, என் பிள்ளைகளை நல்லபடியாக படிக்க வைப்பேன்' என்று சதீசாபாபு கூறியுள்ளார்.