இணையதள தொழில்நுட்ப வசதி காரணமாக, இன்றைய இளைய தலைமுறையினரின் மூளை, மழுங்கடிக்கப்படுகிறது. எந்த ஒரு விஷயத்தையும், அறிந்து கொள்வதற்கு, அவர்களின் கைகள், கூகுளை தான், நாடுகின்றன. இதனால், இன்றைய தலைமுறையினர், சிந்திக்கும் ஆற்றல் அற்றவர்களாக மாறி வருகின்றனர், என, பிரபல பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்,
இணையதளங்களுக்கு அடிமையாகிப் போனவர்களின், செவிட்டில் அறைவது போல், கூறியுள்ளார்
.கூகுள்பிரபல பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர், டிரேவர் பெய்லீஸ். பேட்டரி, மின்சாரம் இல்லாமல், கைகளால் சுற்றி ரேடியோவை இயக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர். டெய்லி மெயில் என்ற ஆங்கில பத்திரிகைக்கு, அவர் அளித்துள்ள பேட்டி:இன்றைய இளைய தலைமுறையினரின் போக்கு, எனக்கு மிகவும் கவலை அளிக்கிறது. எந்த ஒரு விஷயத்தையும், இணையதளம் மூலமாகவே, அறிய முயற்சிக்கின்றனர். இது எப்படி சாத்தியம்; அது என்ன; இதை எப்படி செய்யலாம் என்பது போன்ற, பல்வேறு கேள்விகளுக்கு, இன்றைய இளைஞர்கள், உடனடியாக, கூகுள் இணைய தளத்தை தான், நாடுகின்றனர்.ஒரு விஷயத்தை எப்படி செய்யலாம் என்பது பற்றி, அவர்கள் சிந்திப்பதும் இல்லை; கற்பனை செய்து பார்ப்பதும் இல்லை. இதனால், அவர்களின் மூளை, மழுங்கடிக்கப்பட்டு வறட்சியாகி வருகிறது.அனுபவ ரீதியாகவோ, செயல்முறை சார்ந்தோ, எந்த விஷயத்தையும் அவர்கள் செய்வது இல்லை.

இணையதளங்களால், தாங்களாக, சொந்தமாக எதையும் செய்ய முடியாதவர்களாக மாறி வருகின்றனர். இது, அபாயகரமான போக்கு.அடிமைஇணையதளங்கள், மொபைல் போன், கம்ப்யூட்டர் ஆகியவற்றின் உதவி இல்லாமல், அவர்களால் எதையும் செய்ய முடிவது இல்லை. முழுக்க முழுக்க, அவர்கள், இவற்றை சார்ந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அவற்றுக்கு அடிமையாகி வருகின்றனர்.எனவே, பள்ளிகளில், குழந்தைகளுக்கான, கற்பித்தல் முறையில் மாற்றம் வேண்டும். குறிப்பாக, செயல்வழி கற்றல் நடைமுறைகளை அமல்படுத்த வேண்டும். சில மாதிரி பொருட்களை கொடுத்து, ஒரு பாலத்தை, எப்படி கட்டுவது; இந்த கட்டடத்தை எப்படி வடிவமைப்பது என, குழந்தைகளை செய்யும்படி கூற வேண்டும்.எதிர்கால தலைமுறை, ஆரோக்கியமான, ஆற்றல் உள்ள தலைமுறையாக வளர்வதற்கு, இது தான் சிறந்த தீர்வாக அமையும்.இவ்வாறு, டிரேவர் பெய்லீஸ் கூறினார்
.