ஜப்பானில் வடகிழக்கு பகுதியில் உள்ள சென்டாய் நகரை மையமாகக் கொண்டு அப்பகுதியின் சுமார் 245 கி.மீட்டர் சுற்றளவில் இன்று கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.3 என அளவிடப்பட்டுள்ள இந்த நில நடுக்கம், ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலும் உணரப்பட்டது.
பூமிக்கு அடியில் 33 கி.மீ. ஆழத்தில் உருவான இந்த நில நடுக்கம் காரணமாக அங்கு கடல் அலைகள் சீற்றமாக காணப்படுகின்றன. இதனையொட்டி, ஜப்பானின் கிழக்கு கடற்கரை, மியாமி கடற்கரை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாலை 6.02 மணியளவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த சுனாமி காரணமாக கடல் அலைகளின் உயரம் 2 மீட்டர் வரை உயரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சுனாமி பாதிப்புக்கு உள்ளாகும் என்று கருதப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவசர அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் இரவு 7.20 மணியளவில் ஏற்கனவே விடப்பட்ட சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. இதனால் சுனாமி அச்சத்தில் இருந்த இஷினேமாக்கி, மியாகி, அவுமோரி, இபாராக்கி பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்த நில நடுக்கத்தால், ஒங்கேவா மின் உற்பத்தி நிறுவனத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும் சில பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது.
ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் புகுஷிமா டாய்ச்சி, புகுஷிமா டய்னி மின் உற்பத்தி நிலையங்களும் பாதுகாப்பாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டோக்கியோ அருகேயுள்ள நரிடா விமான நிலையத்தின் ஓடுபாதைகள் மூடப்பட்டுள்ளது. செண்டாய் விமான நிலையத்தின் வழியாக செல்லும் அனைத்து விமானங்களும் அவசரமாக தரையிறக்கப்பட்டன.
ஜப்பான் பிரதமர் யோஷிஹிகோ நோடா, அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து விட்டு நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றார் என அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு 9 ரிக்டர் அளவில், ஜப்பானை குலுக்கிய நில நடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி பேரழிவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டில் இதுவரை இப்பகுதியில் 9 முறை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.