பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தை ஒட்டியுள்ள சீட்டா கிராமத்தில் உள்ள மசூதி ஒன்றில், கடந்த வியாழக்கிழமை ஒரு வழிப்போக்கர் இரவு தங்கினார். மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை, அந்த மசூதியின் மதகுரு தொழுகை நடத்த வந்தபோது, எரிந்த நிலையில் குர்ஆனின் ஏடுகள் கிடந்தன.
இதனையொட்டி, அந்த மசூதியில் வழிப்போக்கர் மட்டுமே தங்கியிருந்ததால், குர்ஆனை அவர் தான் எரித்து இருக்க வேண்டும் என மதகுரு தீர்மானித்தார். மத அவமதிப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கும்படி அந்த வழிப்போக்கரை போலீசாரிடம் மதகுரு ஒப்படைத்தார்.
இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட அந்த கிராமத்தைச் சேர்ந்த சுமார் 200 பேர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். போலீசாரின் காவலில் இருந்து அந்த வழிப்போக்கரை விடுவித்து, வெளியே இழுத்துப்போட்ட அந்த கும்பல், அவரை உயிருடன் தீ வைத்து எரித்துக் கொன்றது.
இந்த சம்பவம் தொடர்பாக 30 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், பணியின் போது கவனக்குறைவாக இருந்த குற்றச்சாட்டின் கீழ் 7 போலீசாரை கைது செய்துள்ளதாகவும் டாடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் தெரிவித்தார்.