நார்வே நாட்டில், மகனை கண்டித்த, இந்திய பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஐதராபாத்தை சேர்ந்தவர் சந்திரசேகர்; நார்வே நாட்டில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிகிறார். இவரது மனைவி அனுபமா. இவர்களது ஏழு வயது மகன், ஆஸ்லோ நகர் பள்ளியில் படிக்கிறான்.
சமீபத்தில் இவர்களது மகன், பள்ளியில், பேன்ட்டிலேயே, சிறுநீர் கழித்து ஈரமாக்கிக் கொண்டான். இதற்காக சந்திரசேகர், மகனை கண்டித்துள்ளார். மறுநாள், பள்ளியிலிருந்து ஒரு பொம்மையை எடுத்து வந்து விட்டான். இதனால் கோபமடைந்த சந்திரசேகர், இது போன்று செய்தால், உன்னை, ஐதராபாத்துக்கு திருப்பி அனுப்பி விடுவேன் என, மிரட்டியுள்ளார்.

இந்த விஷயத்தை சிறுவன், தன் பள்ளி ஆசிரியையிடம் தெரிவித்துள்ளான். சிறுவனை, அவனது பெற்றோர் தொடர்ந்து கொடுமைப்படுத்துவதாக ஆசிரியை, போலீசில் புகார் செய்துள்ளார். இதையடுத்து, சந்திரசேகரையும், அவரது மனைவியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.மகனை கண்டித்த செயலுக்காக, சந்திரசேகரையும், அனுபமாவையும் கைது செய்த, நார்வே போலீசாரின் செயல் குறித்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் அதிருப்தி தெரிவித்துள்ளது. அவர்களை விடுவிக்க, உரிய நடவடிக்கை எடுக்கும்படி, நார்வேயில் உள்ள இந்திய தூதரகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.சந்திரசேகரையும், அனுபமாவையும், ஜாமினில் விடுவிக்க, இந்திய தூதரக அதிகாரிகள் மனு செய்துள்ளனர்.