இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் ரிக்ஷா காரர் ஒருவர் தனது கழுத்தில் துணியொன்றில் தனது ஒரு மாதக் குழந்தையை தொங்கவிட்டு, அணைத்துபிடித்தபடி ரிக்ஷா வண்டியை ஓட்டிச்செல்லும் செய்தியொன்று பிபிசி ஹிந்தி சேவை இணையதளத்தில் அண்மையில் வெளியாகியிருந்தது. அந்த ரிக்ஷா தொழிலாளிக்கு உதவும்பொருட்டு பலர் முன்வந்திருக்கின்றனர். ரிக்ஷா ஓட்டி பிழைப்பு நடத்தும்,பாப்லூ ஜாதவின் மனைவி சாந்தி கடந்த செப்டம்பர் 20-ம் திகதி குழந்தையொன்றை பெற்றெடுத்த நிலையில் உயிரிழந்துவிட்டார். தாய் உயிரிழந்ததையடுத்து குழந்தையை பார்த்துக்கொள்ள வீட்டில் யாரும் இல்லாதபடியால், அந்தக் குழந்தையையும் எடுத்துக்கொண்டு ஜாதவ் தினசரி தொழிலுக்கு கிழம்பிவிடுகிறார். இந்த செய்தி வெளியானதை அடுத்து, அந்தக் குழந்தையை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை எடுத்துக்கொள்ள உள்ளூர் தொண்டுநிறுவனம் ஒன்று முன்வந்திருக்கிறது. 'சாந்தி மருத்துவமனையில் எங்கள் குழந்தையை பெற்றெடுத்தவுடனேயே உயிரிழந்துவிட்டாள்.இப்போது குழந்தையையும் அரவணைத்தபடிதான் ரிக்ஷாவை ஓட்டிச்செல்கிறேன்' கூறும் 38 வயதான ஜாதவ் ராஜஸ்தான், பாரத்பூர் நகரில் வசிக்கிறார். 'வீட்டு வாடகைக்காக மாதத்துக்கு 500 ரூபாய் செலுத்தவேண்டும், ரிக்ஷாவுக்கு தினசரி கூலியாக 30 ரூபாய் செலுத்தவேண்டும்' என்றும் அவர் கூறினார். மறுமணம் புரிந்துகொள்ள அச்சப்படுவதாகக் கூறும் ஜாதவ், தனது பெண் குழந்தையை நல்லபடி வளர்த்தெடுப்பதே தனது ஒரே நோக்கம் என்றும் தெரிவித்தார். பிபிசி ஹிந்தி சேவையின் இணையதளத்தில் கடந்த வியாழனன்று ஜாதவ் பற்றி செய்தி வெளியானதும் இந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் அவருக்கு உதவுவதற்கு பலர் முன்வந்திருக்கிறார்கள்.
Labels:
india