தொழில் நுட்பம் மற்றும் நவீன கண்டுபிடிப்புக்காக தேசிய அளவிலான விருதுகளை கடந்த 1959-ம் ஆண்டு முதல் அமெரிக்கா வழங்கி வருகின்றது. இந்த ஆண்டு இவ்விருதினை பெறுபவர்கள் பட்டியலில், அமெரிக்காவில் வாழும் இந்தியரான ரங்கசுவாமி சீனிவாசனின் பெயரை அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்.


ஐ.பி.எம். நிறுவனத்தின் கீழ் இயங்கும் டி.ஜே. வாட்சன் ஆராய்ச்சி மையத்தில் தற்போது பணியாற்றி வரும் ரங்கசுவாமி சீனிவாசன், 1949-ம் ஆண்டு, சென்னை பல்கலைக் கழகத்தில் அறிவியல் இளங்கலை, முதுகலை பட்டங்களைப் பெற்றவர்.

மருத்துவ துறையில் பயன்படுத்தப்படும் லேசர் சிகிச்சைகள் குறித்து இவர் நடத்திய ஆராய்ச்சியின் பலனாக கண் ஆபரேஷனில் நவீன முறையான 'லேசிக்' சிகிச்சை முறை 1983-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பல லட்சம் மக்கள் பார்வை குறைபாட்டில் இருந்து நிவாரணம் பெற முடிந்தது.

ரங்கசுவாமி சீனிவாசனுடன் மேலும் 12 ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த விருதுகளை வழங்க ஒபாமா பரிந்துரைத்துள்ளார்.

'அமெரிக்க கண்டுபிடிப்பாளர்களான இவர்களை கவுரவிப்பதில் நான் பெருமைப்படுகின்றேன். இந்த நாட்டிற்கு இவர்கள் தங்களின் கண்டுபிடிப்பின் மூலம் பெருமை தேடித் தந்துள்ளனர்' என்று ஒபாமா கூறியுள்ளார்.

வரும் ஜனவரி மாதம் வெள்ளை மாளிகையில் நடைபெறவுள்ள விருது வழங்கும் விழாவில் ரங்கசுவாமி சீனிவாசனுக்கு, இவ்விருதினை ஒபாமா வழங்குகின்றார்.