டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் இலங்கை அணி சூப்பர் ஓவரில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
இலங்கையில் நடைபெற்று வரும் 4வது டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் இன்று தொடங்கியது. இதன் முதல் ஆட்டத்தில் இலங்கை அணியும், நியூசிலாந்து அணியும் மோதின.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. 20ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்களை சேர்த்தது. அந்த அணியின் வீரரான நிக்கோல் 58 ரன்களையும், கப்தில் 38, மெக்கெல்லம் 25, டெய்லர் 23 ரன்களையும் சேர்த்தனர்.
இலங்கை அணி தரப்பில் குலசேகரா, பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், மலிங்கா, அஜந்தா மேன்டீஸ் ஆகியோர் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இலங்கை அணிக்கு தில்ஷான் அபார துவக்கம் கொடுத்தார். ஏனினும் அவர் 75 ரன்னில் ஆட்டமிழந்ததும் ஆட்டத்தில் பதட்டம் அதிகரித்தது. முன்னதாக ஜெயவர்த்தனே 44, சங்ககாரா 21 ஆகியோர் ஆட்டமிழந்திருந்தனர்.
இறுதியில் 6 பந்தில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில் போட்டி இருந்தது. இந்த ஓவரில் இலங்கை அணி 7 ரன்களை மட்டுமே எடுத்ததால் ஆட்டம் டையில் முடிந்தது.
இதையடுத்து சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் முதலில் விளையாடிய இலங்கை அணி 13 ரன்களை எடுத்தது. பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி 6 ரன்களை மட்டுமே எடுத்ததால் தோல்வி அடைந்தது.
உலகக் கோப்பையில் சூப்பர் ஓவர் நடத்தப்படுவது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.