இந்தியன் பிரிமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அது முதல் ஆண்டுதோறும் இந்த போட்டி நடந்து வருகிறது. ஒவ்வொரு தடவையும் இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்து வருவதாலும், கோடிக்கணக்கில் ஊதியம் கிடைப்பதாலும் வெளிநாட்டு வீரர்களும் இதில் பங்கேற்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் 5-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று (புதன்கிழமை) தொடங்கி மே 27-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர்கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், புனே வாரியர்ஸ் ஆகிய 9 அணிகள் பங்கேற்கின்றன.

ஒப்பந்த விதிமுறைகளை மீறியதாக கொச்சி டஸ்கர்ஸ் அணி நீக்கப்பட்டு விட்டது. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய சுற்றை எட்டும்.
இதில், அரைஇறுதி மோதல்கள் கிடையாது.

லீக்கில் முதல் இரு இடங்களை பிடித்த அணிகள் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். இதன் பின்னர் லீக்கில் 3-வது மற்றும் 4-வது இடம் பிடித்த அணிகள் சந்திக்கும். வெளியேற்றுதல் சுற்று (எலிமினேட்டர்) என்று அழைக்கப்படும் இதில் வெற்றி பெறும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோல்வி கண்ட அணியுடன் மோதும். இவற்றில் வெற்றி பெறும் அணியே 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் செல்லும்.

இந்தியா முழுவதும் மொத்தம் 12 நகரங்களில் இந்த போட்டி அரங்கேறுகிறது. இதில் புனே, ராஞ்சி, ராஜ்கோட், தரம்சாலா ஆகிய 4 மைதானங்கள் வருங்காலத்தில் சர்வதேச போட்டிக்காக காத்திருக்கும் இடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில், டோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

மும்பை அணியின் கேப்டன் பதவியை தெண்டுல்கர் துறந்துவிட்டதால், இந்த முறை ஹர்பஜன்சிங் தலைமையில் மும்பை அணி களம் இறங்குகிறது. கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ஹர்பஜன்சிங் தலைமையில் அசத்திய மும்பை அணி அதில் சாம்பியன் பட்டத்தையும் வென்றது.

இதனை மையமாக வைத்தே தெண்டுல்கர் கேப்டன் பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் உண்மையான 'கிங்'காக இருந்து வருகிறது. இதுவரை நடந்துள்ள 4 போட்டிகளில் 2008-ல் 2-வது இடம், 2009-ல் அரைஇறுதி, 2010-ல் சாம்பியன், 2011-ல் சாம்பியன் என்று அனைத்து போட்டிகளிலும் அரைஇறுதியை தொட்ட ஒரே அணி என்ற மகத்தான பெருமையையும் பெற்றுள்ளது.

அதிர்ஷ்டத்துடன், டோனியின் கேப்டன்ஷிப் சென்னை அணியின் வெற்றி ரகசியமாகும். ஹாட்ரிக் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் சென்னை அணி தயாராகி வருகிறது. அணிக்கு புதிய வரவாக ரூ.10 கோடிக்கு வாங்கப்பட்ட ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பலம் சேர்ப்பார்.

அதே சமயம் வலுவான தொடக்கம் அமைத்து கொடுப்பதில் வல்லவரான ஆஸ்திரேலியாவை சேர்ந்த மைக் ஹஸ்ஸி தற்போது வெஸ்ட் இண்டீசில் விளையாடி வருகிறார். அவர் வருகிற 30-ந்தேதி தான் அணியுடன் இணைவார். அதுவரை முரளிவிஜயுடன், அனிருதா தொடக்க ஆட்டக்காரராக ஆடுவார் என்று தெரிகிறது.

சுரேஷ் ரெய்னா, டோனி, பத்ரிநாத் ஆகியோர் மிடில் வரிசையில் முதுகெலும்பாக உள்ளனர். பந்து வீச்சில் போலிஞ்சர், அல்பி மோர்கல், அஸ்வின், ஜகாதி உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக 2010-ம் ஆண்டு இறுதிப்போட்டி வரை வந்துள்ளது. இந்த முறை பிரபலம் வாய்ந்த வீரர்களுடன் அந்த அணி களம் காண இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிராக 45 பந்துகளில் சதம் அடித்த தென்ஆப்பிரிக்க வீரர் ரிச்சர்ட் லெவி எதிர்பார்ப்பு மிக்க வீரர்களில் ஒருவராக இருக்கிறார்.

மேலும் மும்பை அணியை பொறுத்தவரை அனைத்து வெளிநாட்டு வீரர்களும் தொடக்கம் முதலே விளையாடும் வகையில் அணியில் இருக்கிறார்கள். இதனால் யாரை தேர்வு செய்வது, யாரை விடுவது என்ற குழப்பம் காணப்படுகிறது. யார்க்கர் மன்னன் மலிங்கா, ஆல்-ரவுண்டர் பொல்லார்ட், தெண்டுல்கர், ரோகித் ஷர்மா நிச்சயம் மிரட்டுவார்கள். மொத்தத்தில் சென்னை அணிக்கு எல்லா வகையிலும் மும்பை அணி கடும் சவாலாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.இவ்விரு அணிகளும் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் இரு அணிகளும் தலா 4 ஆட்டத்தில் வெற்றி பெற்றிருக்கின்றன.

இருப்பினும் உள்ளூர் சூழல் தன்மை சென்னை அணிக்கு சாதகமான அம்சமாகும். இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.25 கோடியாகும். இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.10 கோடியும், 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.7 1/2 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும். போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

சென்னை சூப்பர்கிங்ஸ்: முரளிவிஜய், அனிருதா, சுரேஷ் ரெய்னா, பத்ரிநாத், டோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, வெய்ன் பிராவோ, அஸ்வின், அல்பி மோர்கல், போலிஞ்சர், ஜகாதி அல்லது பாப் டு பிளிஸ்சிஸ் அல்லது ஸ்டைரிஸ்.

மும்பை இந்தியன்ஸ்: சச்சின் தெண்டுல்கர், ரிச்சர்ட் லெவி அல்லது டேவி ஜேக்கப்ஸ், அம்பத்தி ராயுடு அல்லது சூர்யகுமார் யாதவ் அல்லது சுமன், ரோகித் ஷர்மா, பொல்லார்ட், தினேஷ் கார்த்திக், ஹர்பஜன்சிங் (கேப்டன்), மலிங்கா, ஆர்.பி.சிங் அல்லது முனாப்பட்டேல், பிரக்யான் ஓஜா, மிட்செல் ஜான்சன் அல்லது ஜேம்ஸ் பிராங்ளின்.

இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி செட்மேக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இனி அடுத்த 54 நாட்கள், மொத்தம் 76 ஆட்டங்கள் என்று கோடை கால கொண்டாட்டமாக ஐ.பி.எல். விருந்தை ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.