இணையத்தில் ஆர்டர் செய்த அரை மணி நேரத்தில் பொருட்கள் வீடு தேடி விமானத்தில் வந்து சேர்ந்தால் எப்படி இருக்கும்? இன்று இது நம்ப முடியாத அதிசயமாக இருக்கலாம். ஆனால், நாளை இந்த மாயம் நடைமுறையில் சாத்தியமாகலாம்.
இப்படி எல்லாம் நடக்குமா? எனும் சந்தேகத்தோடு கேட்பவர்களுக்கு அமேசான் நிறுவனத்தின் சமீபத்திய அறிவிப்பு பதிலாகும்.

மின் வணிக முன்னோடியான அமேசான், ட்ரோன் (Drone) என சொல்லப்படும் ஆளில்லா விமானங்களின் மூலம் பொருட்களை அனுப்பி வைக்கும் முறையை பரிசீலித்து வருவதாக அதன் நிறுவனர் ஜெப் பெசோஸ் தெரிவித்துள்ளார்.



அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பெசோஸ் இதற்கான பிரைம் ஏர் திட்டம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திட்டத்தின்படி, ஆள் இல்லாமல் தானாக இயங்கும் குட்டி விமானங்கள் பார்சலை வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்துவிடும். 10 கிலோ மீட்டர் சுற்றளவு பகுதியில் இந்த விமானங்கள் பார்சலை கொண்டு வந்து சேர்க்கும். இதன் மூலம் இணையத்தில் ஆர்டர் செய்த அரை மணி நேரத்தில் பொருள் வாடிக்கையாளர் வீட்டுக்கு வந்து விடும். 5 கிலோ எடை வரையிலான பொருட்களை இந்த விமானங்களால் சுமந்து வர முடியும்.

இது தொடர்பாக ஒளிபரப்பு செய்யப்பட்ட வீடியோவில், குட்டி விமானம் மஞ்சள் நிற பெட்டியில் பார்ச்லை சுமந்து பறந்து வருகிறது. இந்த விமானத்திற்கு ஆக்டோகாப்டர் என பெயரிடப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் அதிவிரைவாக பொருட்களை வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்ப்பதற்கான திட்டத்தோடு அமேசான் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அறிவியல் புனைகதை போல் தோன்றினாலும், ஆள் இல்லா விமானம் மூலம் பொருட்கள் வீடு தேடி வருவது வருங்கால சாத்தியம் தான்.

அமேசானைப் பொருத்தவரை இந்த சேவை நடைமுறைக்கு வர 4 அல்லது 5 ஆண்டுகள் ஆகலாம் என்று பெசோஸ் கூறியுள்ளார். தொழில்நுட்ப சவால் ஒருபுறம் இருக்க, இத்தகைய விமான சேவைக்கு விமான போக்குவரத்துத் துறையின் அனுமதியும் வேண்டும். ஆனால் இது பற்றிய விவாதம் ஏற்கனவே சூடாக நடைபெற்று வருகிறது.

ஆள் இல்லா விமானத்தை டெலிவரிக்கு பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது அமேசான் மட்டும் அல்ல. டொமினோஸ் நிறுவனம் பிட்சாக்களை ஆள் இல்லா விமானம் மூலம் வழங்கும் முயற்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு இது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதே போல ஆஸ்திரேலியாவில் ஜூகல் எனும் நிறுவனம், பாடப்புத்தகத்தை ஆள் இல்லா விமானம் மூலம் அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளது. பாட புத்தகங்களை வாடகைக்குத் தரும் இந்நிறுவனம் இதற்காக பிலிர்டே எனும் தொழில்நுட்ப நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.

முதல் கட்டமாக ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக என்று ஆண்ட்ராய்டு செல்போனில் செயல்படும் செயலியும் உருவாக்கப்பட உள்ளது. இந்த செயலியின் வழியே ஆர்டர் செய்து விட்டு விமானத்தில் பார்சல் வரும் பாதையை ஜி.பி.எஸ் வழியே கண்காணிக்கவும் முடியும் என்று சொல்லப்படுகிறது.

அடுத்த ஆண்டு இந்த சேவை நடைமுறைக்கு வர வாய்பிருப்பதாக ஜூகல் தெரிவித்துள்ளது. அங்கும் இதற்கான அனுமதி தேவை என்றாலும், ஆஸ்திரேலியா ஆல் இல்லா விமானம் தொடர்பான சட்டம் இயற்றிய முதல் நாடாக இருப்பதால் இதற்கான பச்சைக்கொடி காட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புத்தகம் மட்டும் அல்லாமல் உணவு பார்சல்களையும் இந்த குட்டி விமானங்கள் கொண்டு வரலாம் என்று சொல்லப்படுகிறது.

ஆள் இல்லா விமானங்கள் தற்போது ராணுவத்தால் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பல நாடுகளில் அமெச்சூர் ஆர்வலர்களும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனர். அடுத்த கட்டமாக நிறுவனங்கள் இந்த ஆள் இல்லா விமானங்களை வர்த்தக நோக்கில் பயன்படுத்தும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கருதப்படுகிறது. இதற்கான முன்னோடி முயற்சிகள் துவங்கியிருப்பதன் அடையாளம் தான் இந்த செய்திகள்.