நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்தை திரையிடலாம் என சென்னை உயர் நீதிமன்றம் சற்றுமுன்னர் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இப்படத்தைத் திரையிடலாம் என்று நீதிபதி வெங்கட்ராமன் அனுமதி அளித்தார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஸ்வரூபம் திரைப்படம் தீர்ப்பு மீண்டும் இன்றிரவு 10 மணிக்கு அறிவிக்கப்படுவதாக இருந்த போதிலும் 10.20 மணிக்கே தீர்ப்பளிக்கப்பட்டது.
விஸ்வரூபம் படத்திற்கு முறையாக தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதில் பெரும் ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்தே தனியாக விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.
விஸ்வரூபம் படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி கமல்ஹாசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதேபோல மாவட்டங்களில் படத்தைத் திரையிட கலெக்டர்கள் பிறப்பித்துள்ள தடையை நீக்கக் கோரியும் தனியாக ஒரு வழக்கையும் அவர் தொடர்ந்திருந்தார்.
படம் பார்த்த நீதிபதி
இந்த மனுக்களை நீதிபதி வெங்கட்ராமன் விசாரித்தார். இதில் படத்திற்கு அரசு விதித்த தடையை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் படம் பார்த்த நீதிபதி வெங்கட்ராமன் நேற்று தீர்ப்பளிப்பதாக இருந்தார். ஆனால் இன்றைக்கு அதை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
கமல்ஹாசனுக்கு அறிவுரை
மேலும் சுமூகப் பேச்சுவார்த்தை நடத்துமாறும் கமல்ஹாசனுக்கு அவர் அறிவுரை வழங்கினார். இன்று இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்ட்டது.
தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் ஊழல்
இதன்போது அரசுத் தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன் வாதிடுகையில், விஸ்வரூபம் படத்திற்கு முறையாக தணிக்கைச் சான்று வழங்கப்படவில்லை. அதில் முறைகேடு நடந்துள்ளது. இதுமட்டுமல்ல, படங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் பெரும் ஊழல் நடக்கிறது, நடந்து கொண்டுள்ளது. அதுகுறித்தே தனியாக விசாரிக்க வேண்டும். விஸ்வரூபம் படத்திற்குத் தணிக்கைச் சான்று அளித்த குழுவைச் சேர்ந்த யாருமே மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர்கள் அல்ல. அதிலும் முறைகேடு நடந்துள்ளது.
எனவே இந்தப் படத்திற்கு வழங்கப்பட்ட சான்றிதழே முறைகேடானது. நான்கு பேர் மட்டுமே பார்த்து ஒரு சான்று அளிப்பதை ஏற்க முடியாது. அனைவரும் பார்க்க வேண்டும், குறிப்பாக சம்பந்தப்பட்டவர்கள் பார்த்து அனுமதி தர வேண்டும். எனவே இந்தப் படத்தைத் திரையிட தடை விதிக்கப்பட்டது சரியே என்று வாதிட்டார்.
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது
அப்போது குறுக்கிட்ட நீதிபதி வெங்கட்ராமன், இந்தக் காரணத்திற்காகத்தான் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தீர்களா என்று கேட்டார். மேலும் படத்தில் ஆட்சேபகரமான காட்சிகள் எதுவும் இல்லையே என்றும் வினவினார். அதற்குப் பதிலளித்த நவநீதகிருஷ்ணன், சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டியது அரசின் கடமையாகும். இதனால்தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றார்.
வழக்கு ஒத்திவைப்பு
பின்னர் மதிய உணவு இடைவேளைக்காக விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. 2.30 மணிக்கு விசாரணை தொடரும் என்றும் நீதிபதி அறிவித்தார்.
மாநில அரசுக்கு உரிமை இல்லை
முன்னதாக கமல்ஹாசன் தரப்பு வக்கீல் வாதிடுகையில், விஸ்வரூபம் படத்திற்காக இதுவரை தான் சம்பாதித்ததை, தனது உழைப்பை மொத்தமாக கொட்டியுள்ளார் கமல்ஹாசன். இப்படத்திற்காக முழுமையாக அவர் உழைத்துள்ளார். மத்திய தணிக்கை வாரியம் அனுமதி அளித்து விட்ட நிலையில் அப்படத்தைத் தடை செய்வதற்கு மாநில அரசுக்கு உரிமை இல்லை.
எனவே மாநில அரசின் நடவடிக்கை சட்டவிரோதமானதாகும். இந்தப் படத்தைப் பார்த்த பல இஸ்லாமியர்களே அதை வரவேற்றுள்ளனர். எனவே தடையை நீக்கி உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். அரசுத் தரப்பு, கமல்ஹாசன் தரப்பு, தணிக்கை சபை தரப்பு என வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு இரவு 8 மணிக்கு வழங்கப்படும் என்று நீதிபதி வெங்கட்ராமன் அறிவித்தார்.
பொலிஸார் பாதுகாப்பு
ஆனால் தீர்ப்பு 10 மணிக்குத்தான் அறிவிக்கப்படும் என்று நீதிபதி 8 மணியளவில் அறிவித்தார். இந்நிலையில் உயர்நீதிமன்ற வளாகத்தில் பெருமளவில் பொலிஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். விசாரணை நடந்து வரும் கோர்ட்டுக்கு வெளியே பெருமளவில் செய்தியாளர்களும், புகைப்படக் கலைஞர்களும் திரண்டிருந்தனர்.
திரையிட அனுமதி
அதன்படி விஸ்வரூபம் படத்திற்கு ஜனவரி 24ம் தேதி தமிழக அரசு விதித்த தடை உத்தரவு நீக்கப்படுகிறது. விஸ்வரூபம் படத்தை தமிழகம் முழுவதும் நாளை முதல் திரையிடலாம் என்று நீதிபதி அறிவித்தார். மேலும் தனி மனித சுதந்திரத்தில் அரசு தலையிடமுடியாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்.
144 தடை உத்தரவுக்கும் தடை
அதேபோல பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர்கள்இ காவல்துறை அதிகாரிகளால் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவுக்கும் தடை விதித்து நீதிபதி வெங்கட்ராமன் உத்தரவிட்டார்.