உலகமே எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர், துணை அதிபர் தேர்தல் நடைபெறும். அந்நாட்டு அரசியல் சட்டப்படி பிரதிநிதிகள் சபைக்கு 435 பேரும், செனட் சபைக்கு 100 பேரும், வாஷிங்டன் பிரதிநிதிகள் 3 பேருமாக 538 மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்கள் ஓட்டு போட்டு, அதிபர், துணை அதிபரை தேர்வு செய்வார்கள். 


 அதிபர், துணை அதிபர் தேர்தல் மறைமுக தேர்தல் என்றாலும், நமது மக்களவையை போல் அதிக மக்கள் பிரதிநிதிகள் எந்த கட்சிக்கு கிடைத்துள்ளதோ, அந்த கட்சி வேட்பாளர்களே அதிபர், துணை அதிபராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகிறது. எனவே, நாளை நடைபெறும் தேர்தலிலேயே எந்த கட்சிக்கு அதிக எம்.பி.க்கள் கிடைக்கிறார்கள் என்பது தெரிந்து விடும். மொத்தம் 270 எம்.பி.க்களை பெறும் கட்சி வேட்பாளர்களே அதிபர், துணை அதிபராக தேர்வு செய்யப்படுவார்கள்.

தற்போதைய அதிபரும், ஜனநாயக கட்சி வேட்பாளருமான பராக் ஒபாமாவுக்கும், குடியரசு கட்சி வேட்பாளர் மிட்ரோம்னிக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. கடைசியாக வந்த கருத்து கணிப்புகளில் இருவருக்குமே சமபலம் உள்ளதாக தெரிய வந்துள்ளது. ரியல் கிளியர் பாலிடிக்ஸ் என்ற நிறுவனத்தின் கணிப்பில் ரோம்னியை விட ஒபாமா 0.1 சதவீதமே முந்தியுள்ளார். ‘சிஎன்என் போல்’ நடத்திய கணிப்பில் ஒபாமாவுக்கு 48 சதவீதமும், ரோம்னிக்கு 47 சதவீதமும் தரப்பட்டுள்ளது. 

அதே சமயம், பாக்ஸ் நியூஸ் வெளியிட்ட கணிப்பில் ரோம்னிக்கு 45 சதவீதமும், ஒபாமாவுக்கு 44 சதவீதமும் ஓட்டுகள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. வாஷிங்டன் போஸ்ட் , ஏபிசி நியூஸ் நடத்திய கருத்து கணிப்பில் இருவரும் 48 சதவீத ஓட்டுகளை பெற்று சமபலத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த தேர்தல் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஒபாமாவும், ரோம்னியும் இறுதி கட்ட பிரசாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர். 

முன்னேற்றம் தொடர எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று ஒபாமாவும், சரிவில் இருந்து அமெரிக்காவை மீட்க மாற்றம் தேவை என்று ரோம்னியும் பிரசாரம் செய்து வருகின்றனர். அமெரிக்கா முழுவதும் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. நாளை மறுநாள் முன்னணி விவரங்கள் தெரியவரும். இந்திய நேரப்படி பார்த்தால் அன்று நள்ளிரவில் முடிவு தெரியும்.