அமெரிக்காவில் நடந்த, கரப்பான் பூச்சி சாப்பிடும் போட்டியில், வெற்றி பெற்ற வாலிபர், சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து இறந்தார். அமெரிக்காவின், புளோரிடா மாகாணத்தின், டீர்பீல்டு பீச் பகுதியில், பாம்பு விற்கும் கடையில் வினோதமான போட்டி, 5ம் தேதி நடத்தப்பட்டது. கரப்பான் பூச்சி, புழு உள்ளிட்டவற்றை சாப்பிடும் போட்டியில், 30க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில், வெற்றி பெறுபவர்களுக்கு மலைப்பாம்பு, பரிசாக அறிவிக்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற எட்வர்டு ஆர்ச்போல்டு, 32, என்பவர் சகட்டுமேனிக்கு, கரப்பான் பூச்சிகளை எடுத்து வாயில் திணித்து சாப்பிட்டார். அதிக கரப்பான் பூச்சிகளையும், புழுக்களையும், குறுகிய நேரத்தில், விரைவில் சாப்பிட்டதற்காக இவருக்கு மலைப்பாம்பு பரிசாக வழங்கப்பட்டது. இந்த பாம்பை, நண்பர்களுக்கு அளிக்கப்போவதாகக் கூறிய எட்வர்டு, சிறிது நேரத்தில் வயிறு வலியால் துடித்தார். அதை தொடர்ந்து, மயங்கி விழுந்தார். உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே அவர் இறந்து விட்டார். "பின்விளைவுகளை ஏற்பதாகக் கூறி, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின் தான், போட்டியில் பங்கேற்க போட்டியாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். எனினும், எட்வர்டு இறந்து விட்டது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது' என பாம்பு வியாபாரி, பென்சீகல் தெரிவித்துள்ளார்.