இந்தக் குழந்தையின் மழலை பேச்சும், எக்ஸ்பிரஷன்களும் பார்ப்பவர்களின் மனதை ஈர்க்கின்றன. தந்தையின் அன்புத்தொல்லை தாங்க முடியாமல், இறுதியில் 'அப்பாதான் பிடிக்கும்' என்று சொல்லிவிட்டு, 'சும்மாதான் சொன்னேன். அம்மாதான் எப்பவும் பிடிக்கும்' என்ற ரீதியில் இவள் ஜாலியாகப் பேசுவது கல் நெஞ்சம் கொண்டவர்களையும் கரைத்து விடும். மேடி டிப்பெட்டுக்கு ஒரு வயது நிரம்பும்போது எடுக்கப்பட்ட இந்த வீடியோ, அவளுடைய தாத்தாவுக்கும், பாட்டிக்கும் குழந்தையை காட்டுவதற்காக ஃபோட்டோ எடுக்கும்போது நடந்த எதேச்சையான உரையாடல். 2012 ஆம் ஆண்டில் வைரலாக இருந்த இந்த வீடியோவைப் பார்த்து இதுவரை சுமார் 1.12 கோடி பேர் அகமகிழ்ந்திருந்திருக்கின்றனர்.
இன்னமும் யூடியூப் மூலமாக கோடிக்கணக்கான பேரை மகிழ்ச்சியில் ஆழ்த்த இருக்கும் இந்த புத்திசாலிக் குழந்தையான மேடி டிப்பேட் இன்று நம்முடன் இல்லை என்பதுதான் வேதனையான விஷயம். ஆம், கடந்த பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி காலம் சென்று விட்டாள் மூன்று வயதே ஆகும் மேடி.
17 ஆம் தேதி மேடிக்கு ஜலதோஷம் இருப்பதற்கான அறிகுறிகள் தெரிந்திருக்கின்றன. வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு மருத்துவர், சாதாரண ஜலதோஷம்தான், கவலைப்படத்தேவையில்லை என்று சொல்லிவிட, மீண்டும் வீட்டுக்கே வந்து விட்டனர். ஆனால், நேரம்போக போக ஜலதோஷம் தீவிரமாகவே, இன்னொரு பெரிய மருத்துவமனைக்கு மேடியை கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கு சோதனை செய்தபோது இரண்டுவித ஜலதோஷ வைரஸ்கள் மேடியை பாதித்திருந்ததையும், அதில் ஒன்று குழந்தையின் இதயத்தைத் தாக்கிக்கொண்டிருப்பதையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். இனி, ஒன்றும் செய்யமுடியாது என்ற சூழ்நிலை. சற்றுநேரத்தில் அவளுடைய தந்தையின் மடியிலேயே அகால மரணம் அடைந்தாள்.
டெய்லி டெலிகிராஃப் பத்திரிகைக்கு மேடியின் தாயார் கெரின் டிப்பெட் அளித்த பேட்டியில், 'மேடி இந்த உலகில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கக்கூடியவள். ஆனால், அவள் கொடுத்து வைக்கவில்லை போலும். ஆனால், இன்னும் 10 வருடம் கழித்தும் மன உளைச்சலில் இருக்கும் பலர் இந்த வீடியோவைப் பார்த்து மகிழ்ச்சியடைவார்கள். அதுதான் மேடி வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தம்' என கண்ணீருடன் கூறியிருக்கிறார். மேடிக்காக ஆஸ்திரேலியாவின் நியூகேஸில் பூங்காவில் நடந்த நினைவு தினத்தில்கூட பெற்றோர் விருப்பத்தின்படி புன்னகைகளும், பலூன்களும் நிரம்பிய மகிழ்ச்சியான நாளாகத்தான் கடந்திருக்கிறது.