இலங்கையின் இரண்டாவது சர்வதேச வானூர்தி நிலையம் இன்று உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
தென்னிலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த வானூர்தி நிலையத்தின் கட்டுமாண பணிகள் கடந்த 2009 ம் ஆண்டு நவம்பர்  27 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
சுற்றுலாத்துறையை தென்னிலங்கையிலும் விரிவாக்கும் நோக்கில் இந்த வானூர்தி நிலையத்திலிருந்து மேம்படுத்தப்பட்ட பாதைகளும் ஆரம்பமாகின்றன.
வானூர்தி நிலைய திட்டத்தின் முதலாவது கட்டத்திற்காக 22 கோடி அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.
வருடம் ஒன்றிற்கு 10 லட்சம் வானூர்தி பயணிகளை இந்த வானூர்தி நிலையத்தினால் கையாள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று  வானூர்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டு தொழில்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் உடனடியாக இரண்டாவது கட்ட பணிகள் இடம்பெறவுள்ளன.
இரண்டாவது கட்ட திட்டம் பூர்த்தியடைந்ததன் பின்னர்  எதிர்வரும் 2015 ஆம் ஆண்டளவில்  இந்த வானூர்தி நிலையத்தின் ஊடாக 50 லட்சம் பயணிகளை கையாள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியாக பெரிய ஏ380 ரக விமானமும் இந்த வானூர்தி நிலையத்தில் தமது சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதேவேளை இந்த விமான நிலையத்தை பார்வையிட்ட சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் பிரதிநிதிகள் சகல வசதிகளையும் கொண்ட சர்வதேச தரத்தை கொண்டுள்ளதாக திருப்தி வெளியிட்டுள்ளதுடன் அதற்கான அனுமதியினையும் வழங்கியுள்ளது.




இலங்கையின் முதலாவது சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்கா கடந்த 1963ஆம் ஆண்டு திறக்கப்பட்ட போதிலும்  சர்வதேச தர சான்றிதழ் ஐந்து வருட காலத்தின் பின்னரே கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Post Tags: