வயலில் நெல் அறுவடை செய்த களைப்பினால் வீதியில் படுத்துறங்கிய இரு குடும்பஸ்தர்களின் மேல்  இராணுவ வாகனம் ஏறியதில் ஒருவர்  ஸ்தலத்திலேயே பலியானதுடன்,  மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை  அதிகாலை 12. 30 மணியளவில் பூநகரி செல்லையாற் தீவு வீதியில் இடம்பெற்றது.

இச்சம்பவத்தில் பூநகரி செட்டியாக்  குறிச்சியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான தம்பையா இரத்தினலிங்கம் (வயது 32)  என்பவர் சம்பவ இடத்திலேயே  உடல் நசியுண்டு பலியானார்.
அதே இடத்தைச் சேர்ந்த குணரத்தினம்  குணசீலன் (வயது 51) என்பவர்  படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி  இருவரும் அதே இடத்திலுள்ள வயலில் இரவு வேளை நெல் அறுவடை செய்துவிட்டு களைப்பினால் வீதியில் தூங்கியுள்ளனர். நுளம்புக் கடியிலிருந்து தப்புவதற்காக  சாக்கினால் மூடிக் கொண்டு இவர்கள் படுத்துறங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிகாலை 12 .30 மணியளவில் அவ்வீதியால் வந்த இராணுவத்தின்  தண்ணீர் தாங்கி இவர்களின் மேலால் ஏறியுள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே  உடல் நசுங்கி ஒருவர்  உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்ட கிளிநொச்சி பொலிஸார் மேற்படி வாகனச் சாரதியைக் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம்  பிரேத பரிசோதனைகளைத் தொடர்ந்து நேற்று மதியம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.