ஜோர்தானில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் இலங்கைப் பணிப்பெண்கள் சிலர் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

தொழிற்சாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் ஆடைத் திருட்டு சம்பவம் தொடர்பில் அதன் உரிமையாளர்கள் இலங்கைப் பணிப்பெண்கள் மீது குற்றஞ் சுமத்தியுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததாக இலங்கைப் பணிப்பெண்கள் குறிப்பிடுகின்றனர்.

இதன்போது அந்நாட்டு பொலிஸார் தம்மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் நடத்தியதாக அவர்கள் கூறுகின்றனர்.

இதுதொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கல ரந்தெனியவிடம் வினவப்பட்டது.

ஜோர்தானிலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற திருட்டுச்  சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக பொலிஸார் அங்கு சென்றிருந்த வேளையில் இலங்கைப் பணிப்பெண்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்ததாக  அந் நாட்டிற்கான இலங்கைத் தூதரகம் ஊடாக அறிய முடிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் ஜோர்தான் சட்டத்தின் பிரகாரம் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இலங்கைப் பெண்கள் 8 பேர் அந்த நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேலும் சுட்டிக்காட்டினார்.