இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையேயான மோதல் தொடர்வதால், தங்கள் நாட்டு மக்களை மீட்க, அமெரிக்கா, மூன்று கப்பல்களை அனுப்பியுள்ளது.
பாலஸ்தீனத்துக்கும், இஸ்ரேலுக்கும் நீண்ட காலமாக விரோதம் இருந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் சில பகுதிகளை, இஸ்ரேல் இன்னும், தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
கடந்த வாரம், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், குடியிருப்பு பகுதி ஒன்று சேதமடைந்து, இஸ்ரேலியர்கள், மூன்று பேர் பலியாயினர்.
இதையடுத்து, இஸ்ரேலிய ராணுவம், பாலஸ்தீனத்தின் மீது தாக்குதலை துவக்கியது. காசா நகரத்தின் மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதலில், நேற்று வரை, 110 பேர் பலியாகி உள்ளனர். ஹமாஸ் அமைப்பினரும் தங்கள் பங்குக்கு, எல்லை பகுதியிலிருந்து ராக்கெட் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.பாலஸ்தீனத்தின் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலை, இஸ்ரேல், உடனடியாக, நிறுத்த வேண்டும் என, எகிப்து அதிபர் முகமது முர்சி, கோரியுள்ளார். இது தொடர்பாக அவர், அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.
இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்னையில் சுமூக தீர்வு ஏற்படுத்த, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி, இஸ்ரேலுக்கு விரைந்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில், இந்த சண்டை காரணமாக பதட்டம் நிலவுவதால், தேவைப்படும் பட்சத்தில், தங்கள் நாட்டு மக்களை மீட்க, அமெரிக்கா, மூன்று கடற்படை கப்பல்களை அனுப்பி வைத்துள்ளது.பாலஸ்தீனத்துக்கு தங்கள் முழு ஆதரவை தெரிவிக்கும் வகையில், எகிப்து மற்றும், 12 அரபுநாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், காசா நகருக்கு வந்துள்ளனர். இஸ்ரேல் தாக்குதலில் காயமடைந்தவர்களை சந்தித்து அவர்கள், ஆறுதல் கூறினர்.
Labels:
middleeast
,
war
,
world