நித்யானந்தா விவகாரம் தற்போது சூடுபிடிக்க துவங்கியுள்ள நிலையில் அவரை கைது செய்ய கர்நாடகா முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பெங்களுரூவில் உள்ள பிடதி ஆசிரமத்திற்கு கர்நாடகா அரசு சீல் வைத்துள்ளது. இதற்கிடையே மதுரை ஐகோர்ட்கிளையில் நித்யானந்தா குறித்தும் மதுரை ஆதீன மடத்தில் நடந்த சம்பவங்கள் குறி்த்தும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நித்யானந்தா மீது சமீபத்தில் கர்நாடக டிவி'யில், ஆர்த்தி ராவ் என்ற பெண் நித்யனாந்தா மீது பாலியல் புகார் கூறி பேட்டியளித்திருந்தார். .இதற்கு மதுரையில் பதிலளித்த நித்யானந்தா, அந்தப் பெண்ணுக்கு பயங்கர நோய் இருந்ததாகவும், அதை குணப்படுத்திக் கொள்ளவே அவர் ஆசிரமம் வந்ததாகவும் கூறி தன் மீதான குற்றச்சாட்டை நித்யானந்தா மறுத்தார்.

முற்றுகை:ஆர்த்திராவின் குற்றச்சாட்டை அடுத்து, நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தை, சில கர்நாடக அமைப்புகள், கடந்த சில நாட்களாக முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன.இதற்கிடையில், பிடதி ஆசிரமத்தில் பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக நித்யானந்தா சீடர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டனர். நித்யானந்தா மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜாமின் கோரி மனுவும் நித்யானந்தா மனு செய்துள்ளார். இதையடுத்து, அவர் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது.

ஆசிரமத்திற்கு சீல்: இந்நிலையில், நித்யானந்தாவின் ஆசிரம் பெங்களூரு பிடதியில் உள்ளது. நேற்று முன்தினம் பேட்டியளித்த கர்நாடக முதல்வர் சதானந்தகவுடா , நித்யானந்தா மீதான புகாரில் உண்மையிருக்கும்பட்சத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
இதைத்தொடர்ந்‌‌து இன்று நித்யானந்தா ஆசிரமத்திற்கு கர்நாடக அரசு சீல் வைத்துள்ளது. மேலும் அவரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதுடன் , அவர் மீதான புகார் பற்றி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் நித்யானந்தா மீதான ஜாமின‌ை ரத்து செய்யவும் முடிவு செய்துள்ளது.


மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு: இதற்கிடையே , மதுரை இந்து மக்கள் கட்சித்தலைவர் சோ‌லைக்கண்ணன் ,மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில், மதுரை ஆதீனம் மடத்தில் சமாதானம் செய்ய அழைத்தனர். அங்கு சென்ற போது மடத்தில் சில விரும்பதகாத செயல்கள் நடப்பதாகவும், இதில் நடிகை ரஞ்சிதாவும் அங்கு இருந்ததாகவும் இதற்கு நித்யானந்தா, ரஞ்சிதா ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி செல்வம், நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா, போலீஸ் அதிகாரரிகள் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். வழக்கை வரும் 22-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.தற்போது நித்யானந்தா தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

கைது செய்ய முதல்வர் உத்தரவு: முன்னதாக பிடதி ஆசிரம நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் , மற்றும் போலீசார் அறி்‌க்கையினை முதல்வர் சதானந்த கவுடாவிடம் சமர்பித்தனர். இதைத்தொடர்ந்து ‌தலைமறைவாக உள்ள நித்யானந்தாவை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.