சிரியாவில் அதிபர் பஷார் அல்-ஆசாத் ஆட்சிக்கு எதிராக கடந்த ஒரு வருடமாக பொதுமக்கள் போராடி வருகின்றனர். இதனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. இருந்தும் போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

இந்த நிலையில் நேற்று சிரியாவில் டமாஸ்கஸ் அருகே சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின.

இச்சம்பவத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 16 பேர் பலியானதாக சிரியா அரசு டி.வி. தெரிவித்தது. போராட்டக்காரர்கள் ஒரு வீட்டை வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலையாக மாற்றி இருந்ததாகவும், அங்கு குண்டு வெடித்ததில் பலர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இதை போராட்டக்காரர்கள் மறுத்துள்ளனர். ராணுவம் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 70 பேர் பலியாகி இருப்பதாக கூறியுள்ளனர். இறந்தவர்களில் 16 பேர் பெண்கள், 13 பேர் குழந்தைகள் ஆவர். பலியானவர்களின் உடல்களை ரோட்டில் வரிசையாக அடுக்கி வைத்திருந்தனர்.

இதற்கிடையே, போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதாக ரஷியாவும், ராணுவம் தாக்குதல் நடத்தியதாக பிரான்சும் குற்றம் சுமத்தியுள்ளன. மேலும் இச்செயலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.