தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்ற பாகிஸ்தான் சிறுமி மலாலாவுக்கு அறுவை சிகிச்சை முடிந்தது. அவள் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாள்.பாகிஸ்தானில் ஸ்வட் பள்ளத்தாக்கு பகுதியில் பெண் கல்வி, உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்த மலாலா யூசுப்சை (15) என்ற சிறுமி கடந்த அக்டோபர் 9ம் தேதி தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டாள். உயிருக்கு ஆபத்தான நிலையில் விமானம் மூலம் இங்கிலாந்து அழைத்து வரப்பட்ட அவர் பிர்மிங்ஹாம் பகுதியில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.
அவளது தலையில் துப்பாக்கி குண்டு துளைத்தால் மண்டையோடு சேதமடைந்தது. அந்த பகுதியில் அறுவை சிகிச்சை மூலம் டைட்டானியம் தகடு வைத்து மூடப்பட்டது. மேலும் கேட்கும் திறனை இழந்ததால் அவருக்கு Ôகாக்ளியர்Õ கருவி பொருத்தப்பட்டது.மலாலாவுக்கு கடந்த வாரம் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு வேகமாக குணமடைந்த மலாலா, மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாள். எனினும், அவள் தனது குடும்பத்துடன் இங்கிலாந்திலேயே தங்கி இருப்பாள். அவ்வப்போது பரிசோதனைக்கு வருமாறு டாக்டர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.மலாலாவின் தந்தை ஜியாவுதின் யூசுப்சைக்கு பிர்மிங்ஹாமில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளதால் மலாலா அங்கேயே இனி தங்கி இருப்பாள் என எதிர்பார்க்கப்படுகிறது.