அசைவம் சாப்பிடுபவர்களைக் காட்டிலும், சைவ உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு இருதயக்கோளாறுகள் ஏற்படுவது மிகவும் குறைவு' என, பிரிட்டன் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.அசைவம் மற்றும் சைவ உணவு வகைகளை சாப்பிடுபவர்கள் மத்தியில், யாருக்கு இருதயக்கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பது குறித்த ஆய்வு ஒன்று, சமீபத்தில், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்டது.

இதில், சைவப் பிரியர்களுக்கு, 32 சதவீதம் வரை, இருதயக்கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவே என, கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் பிரான்செசா குரோனியே மற்றும் டிம் கே ஆகியோர் கூறியதாவது:இருதயக்கோளாறுகளுக்கு முக்கியக் காரணம், ரத்தத்தில் அதிகக் கொழுப்பு சேருதல் மற்றும் ரத்தக் கொதிப்பு ஆகியவைதான். இதில், இருதயநோய் ஏற்படாமல் தடுப்பதில், உணவுக்கட்டுப்பாடு முக்கிய இடத்தை வகிக்கிறது. சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு இந்த பிரச்னைகள் மிக மிக குறைவு.அதே நேரத்தில் அசைவம் சாப்பிடுபவர்களுக்கு இருதயக் கோளாறுகள் ஏற்படுவதற்கான ஆபத்துகள் அதிகம். காரணம், அதிகபட்சமான கொழுப்பு ரத்தத்தில் சேருவதும், ரத்தக்கொதிப்பு அதிகரிப்பதும் தான். சாதாரணமாக, சர்க்கரை நோயாளிகள் நீங்கலாக, சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு உடற்பருமன் பிரச்னைகள் கூட அவ்வளவாக ஏற்படுவதில்லை. இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

இது குறித்து, டில்லியை சேர்ந்த, இருதய நோய் நிபுணர் கே,கே. அகர்வால் கூறியதாவது:இந்தியர்களைப் பொறுத்தவரை பெரும்பாலானவர்கள் அசைவம் சாப்பிடுபவர்களாகத்தான் உள்ளனர். அதனால், இருதய நோய்களுக்கு எளிதாக ஆட்படுகின்றனர். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியர்களே அதிக அளவில் இப்பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, இந்தியாவின் நகர்ப்புற பகுதிகளில், ஓராண்டில், 24 லட்சம் பேர், இருதயக் கோளாறுக்கு பலியாகின்றனர்.எனவே, இறைச்சி சாப்பிடுவதற்கு பதிலாக, மீன் வகைகளை எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக, கடல் உணவுவகைகளை அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலம், இருதயக் கோளாறுகளிலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். இவ்வாறு அகர்வால் கூறினார்.

Post Tags: