கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் பனிப் பொழிவினாலும் சில இடங்களில் பனிப் புயலாலும் ஐரோப்பாவின் பல முக்கிய நாடுகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது.

முக்கியமாக ஜேர்மனி, பிரான்ஸ், மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் பல விமான நிலையங்கள் மூடப்பட்டும் சில தமது சேவையைக் குறைத்தும் உள்ளன.

ஜேர்மனியின் ஃப்ராங்ஃபர்ட் விமான நிலையம் முற்றாக மூடப்பட்டுள்ளது. மேலும் பாதையில் கொட்டியுள்ள பனியை அப்புறப்படுத்தும் பணியில் வேறு வழியின்றி இராணுவமும் ஈடுபட்டு வருகின்றது. இம்முறை மேற்கு ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள கடும் பனிப் பொழிவு பருவம் கடந்து பெய்யும் பனி என்பதால் மக்கள் அதிக சிரமத்தை எதிர் நோக்கியுள்ளனர். பாரிஸ் நகருக்கும் இலண்டனுக்கும் இடையேயான ரயில் சேவையும் நிறுத்தப் பட்டுள்ளது. இவ்விரு நாடுகளிலும் பல இடங்களில் மின்சார சேவை துண்டிக்கப் பட்டுள்ளது. மேலும் பல சாரதிகள் தமது வாகனங்களுடன் பாதையின் நடுவே அகப்பட்டு உள்ளனர்.


பிரிட்டன், ஜேர்மன், பெல்ஜியம் ஆகிய நாடுகள் மிகப் பெரும் சேதத்தை எதிர் நோக்கியுள்ள வேளையில் பிரான்ஸ் தான் இப் பனிப்புயலால் மிக அதிக பாதிப்பை அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. கால வரையறையின்றி மூடப்பட்டுள்ள ஐரோப்பாவின் மூன்றாவது முக்கிய விமான நிலையமான ஃப்ராங்ஃபர்ட் இல் 5 அங்குலத்துக்கு பனி நிரம்பியுள்ளது. இன்று மதியம் மட்டும் 355 விமானங்களின் பயணங்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன. நாளை சுவிற்சர்லாந்திலும் பரவலான பனிப்பொழிவு ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இது இளந்தளிர்காலம் பிறக்கும் காலம் என்பதால் இந்த மாதத்தின் கடைசி பனிப்பொழிவு காலம் இதுவெனவும் தெரிவிக்கப்படுகிறது.